நீண்ட இழுபறிக்கு பின்பு வருகிற 10-ந் தேதி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் 4 பேரின் மந்திரி பதவிகளை பறிக்க முடிவு?
காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் நீண்ட இழுபறிக்கு பின்பு வருகிற 10-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும் மந்திரிகள் 4 பேரின் பதவியை பறிக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,
காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் நீண்ட இழுபறிக்கு பின்பு வருகிற 10-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும் மந்திரிகள் 4 பேரின் பதவியை பறிக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
மந்திரிசபையில் 7 காலி இடங்கள்
மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 6 இடங்கள் காங்கிரசுக்கும், ஒரு இடம் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கும் உள்ளது. மந்திரி பதவிக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவுவதால் மந்திரிசபை விரிவாக்கம் செய்வதை கூட்டணி கட்சி தலைவர்கள் தள்ளி போட்டுக் கொண்டே வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாலும், மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலமாக பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாலும் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த மாதம் 10-ந் தேதி...
இதுபற்றி முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், “மந்திரிசபை விரிவாக்கம் செய்ய கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதிக்கு மேல் 10-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதி. யாருக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். மந்திரிசபை விரிவாக்கத்துடன் 20 வாரிய தலைவர்களின் பதவியை நிரப்பவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது,“ என்றார்.
இதுபோல, அடுத்த மாதம் 10-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவும் தெரிவித்துள்ளார். வருகிற 3-ந் தேதி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டம் முடிந்த பின்பு மந்திரிசபை விரிவாக்கம் குறித்து டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பேச இருப்பதாகவும், அவரது அனுமதி கிடைத்ததும் வருகிற 10-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
4 பேரை நீக்க முடிவு?
இதற்கிடையில், நீண்ட இழுபறிக்கு பின்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதால், மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்து இருக்கும் எம்.எல்.ஏ.க் கள் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் பதவி வழங்கும்படி கேட்டு வற் புறுத்த தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது மேலும் வருகிற 3-ந் தேதிக்கு பின்பு டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து மந்திரிபதவி வழங்கும்படி கேட்க சில எம்.எல்.ஏ.க்கள் தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மந்திரிகள் தங்களது பணியை சரியாக செய்யவில்லை என்றும், அவர்கள் மீது முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் 4 பேரிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்க முடிவு செய்திருப்பதாகவும், அதே நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை சரியாக நிர்வகிக்காத சில மந்திரிகளின் துறைகள் மாற்றப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.
Related Tags :
Next Story