கடன்தொல்லையால் விபரீத முடிவு சிறுநீரகம் விற்பனைக்கு; சுவரொட்டி மூலம் விளம்பரம் மண்டியா வாலிபரின் அறிவிப்பால் பரபரப்பு


கடன்தொல்லையால் விபரீத முடிவு சிறுநீரகம் விற்பனைக்கு; சுவரொட்டி மூலம் விளம்பரம் மண்டியா வாலிபரின் அறிவிப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Sept 2018 4:00 AM IST (Updated: 30 Sept 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா அருகே கடன் தொல்லையில் சிக்கிய வாலிபர், சிறுநீரகம் விற்பனைக்கு என்று சுவரொட்டி மூலம் விளம்பரப்படுத்தி உள்ளார்.

மண்டியா, 

மண்டியா அருகே கடன் தொல்லையில் சிக்கிய வாலிபர், சிறுநீரகம் விற்பனைக்கு என்று சுவரொட்டி மூலம் விளம்பரப்படுத்தி உள்ளார். இந்த அறிவிப்பு அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடன் தொல்லை

மண்டியா அருகே தாகஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவர் மண்டியா தொழிற்பேட்டை சர்க்கிளில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் புதியதாக வீடு கட்டுவதற்கு உள்பட பல்வேறு காரணத்திற்காக வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். ஆனால் அவர் வட்டித்தொகையை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் அவருக்கு கடன் கொடுத்தவர்கள், கடன் தொகையை திரும்ப கேட்டு வந்தனர். இதனால் வினோத்குமார் தனக்கு சொந்தமான நிலத்திற்கான பத்திரத்தை அடகு வைத்து பணத்தை கொடுக்க முடிவு செய்தார். இதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் தனது நிலத்திற்கான வரைபடத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் அவரிடம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

சுவரொட்டி

ஆனால் தன்னிடம் பணம் இல்லை. அதனால் தான் கடன் வாங்கியவர்களுக்கு நிலத்தை அடகு வைத்து பணம் கொடுக்க முடிவு செய்துள்ளேன். நீங்களும் லஞ்சம் கேட்டால் நான் எங்கே போவேன் என்று கூறியுள்ளார். மேலும் லஞ்சம் கொடுக்க முடியாது எனவும் வினோத்குமார் கூறியுள்ளார். இதனால் நிலத்தை அடகு வைக்க முடியாமலும், கடனை செலுத்த முடியாமலும் அவர் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் அவரை பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மனம் உடைந்த வினோத்குமார் நூதன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, பணம் கொடுத்தால் எனது சிறுநீரகத்தை தருகிறேன் என்று தனது டீக்கடையில் சுவரொட்டி ஒட்டி வைத்துள்ளார்.

தற்கொலை செய்ய கோழை அல்ல

அவரது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வினோத்குமாரின் இந்த சுவரொட்டி அறிவிப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரிடம் கேட்டபோது தான், தனது நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் பணத்திற்காக சிறுநீரகத்தை விற்கபோவதாக வினோத் குமார் அறிவித்துள்ளது சரியல்ல என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வினோத்குமாரிடம் கேட்ட போது, நான் கடன் தொல்லையில் சிக்கியுள்ளேன். எனது நிலத்தை அடகு வைக்க முடிவு செய்தேன். ஆனால் அதற்கான வரைபடம் கேட்டு விண்ணப்பித்தேன். அதற்கு அதிகாரி லஞ்சம் கேட்கிறார். இதனால் நான் பணத்திற்காக எனது சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தேன். கடன் தொல்லை காரணமாக நான் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை அல்ல என்றார்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Next Story