நெல்லை சந்திப்பில் திருச்செந்தூர் ரெயிலுக்கு அலைமோதிய பயணிகள் கூட்டம் டிக்கெட் கிடைக்காதவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று திருச்செந்தூர் ரெயிலுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று திருச்செந்தூர் ரெயிலுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. அப்போது டிக்கெட் கிடைக்காத பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சந்திப்பு நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் 5 முறை பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் நவதிருப்பதி கோவில்களுக்கு ஏராளமானவர்கள் புறப்பட்டனர். அவர்கள் ரெயிலில் செல்வதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு காலை 9 மணி அளவில் வந்து குவிந்தனர். மேலும் நாலுமாவடியில் கிறிஸ்தவ விழா, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் விழா நடைபெறுவதால் அங்கு ரெயிலில் செல்வதற்கும் நெல்லை சந்திப்புக்கு ஏராளமான பயணிகள் வந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் போராட்டம்
அவர்கள் காலை 9.30 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் பயணிகள் ரெயிலில் செல்வதற்காக சந்திப்பு கவுன்ட்டரில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் நின்றனர். டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு பயணிகள் ரெயில் பெட்டிகளில் போட்டி போட்டு ஏறினர். இதனால் அனைத்து பெட்டிகளிலும் படிக்கட்டு வரை கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து ஏராளமான பயணிகள் டிக்கெட் எடுக்க வரிசையில் காத்து இருந்தனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் பயணிகளுக்கு போதுமான அளவு டிக்கெட் வழங்கி விட்டதால், அனைவருக்கும் உடனடியாக டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதுகுறித்து ஊழியர்கள் பயணிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் தாமதம்
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த ரெயிலில் மீதமுள்ளவர்கள் பயணிக்க ஆலோசனை கூறி அமைதியை ஏற்படுத்தினர். இதையடுத்து அந்த ரெயில் ¾ மணிநேரம் தாமதமாக காலை 10.15 மணிக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story