5 பவுன் சங்கிலியை பறித்தனர்: இளம்பெண் துரத்தி சென்றதால் நகையை வீசிவிட்டு கொள்ளையர்கள் ஓட்டம்


5 பவுன் சங்கிலியை பறித்தனர்: இளம்பெண் துரத்தி சென்றதால் நகையை வீசிவிட்டு கொள்ளையர்கள் ஓட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2018 3:00 AM IST (Updated: 30 Sept 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இளம் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்தனர்.

நெல்லை, 

நெல்லையில் நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இளம் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்தனர். அந்த பெண் சத்தம் போட்டவாறு துரத்தி சென்றதால் நகையை வீசி விட்டு அவர்கள் தப்பி சென்றனர்.

நகை பறிப்பு

நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மனைவி லட்சுமி (வயது 28). இவர் நேற்று காலை வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர்.

அதில் ஒருவர் கீழே இறங்கி அவர் அருகில் வந்தார். பின்னர் அவர் திடீரென லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு வேகமாக ஓடினார். சற்று தொலைவில் தயார் நிலையில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த கூட்டாளியுடன் ஏறினார். அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர்.

வீசி எறிந்தனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி திருடன் திருடன் என கூச்சலிட்டவாறே மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து துரத்தி சென்றார். சிறிது தூரத்தில் அந்த மோட்டார் சைக்கிளை எட்டிப்பிடித்தார். அப்போது அந்த தெரு மக்களும் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து கொள்ளையர்கள், லட்சுமியிடம் பறித்த சங்கிலியை சாலையில் வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்களை துணிச்சலுடன் துரத்தி சென்ற இளம்பெண்ணை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.

Next Story