ரூ.1¼ கோடி செலவில் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க கூடுதல் கிட்டங்கி


ரூ.1¼ கோடி செலவில் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க கூடுதல் கிட்டங்கி
x
தினத்தந்தி 30 Sept 2018 3:45 AM IST (Updated: 30 Sept 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

விவசாய விளை பொருட்களை பாதுகாக்க ரூ.1 கோடியே 30 லட்சத்தில் கூடுதல் கிட்டங்கி கட்டும் பணி தொடங்கியது.

மானாமதுரை,

மானாமதுரை புது பஸ்நிலையம் அருகே விவசாயிகள் தங்களது விளை பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேளாண்துறை சார்பில் குடோன்கள் உள்ளன. மானாமதுரையை சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் மிளகாய், பருத்தி, நெல், கடலை உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க 2 குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினசரி நிலக்கடலை, பருத்தி, நெல் போன்றவற்றின் விலையும் அறிவிப்பு பலகையில் எழுதப்படுகிறது.

விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை மார்க்கெட் விலையில் விற்பனை செய்யலாம், அதிகமாக விளைவித்த பொருட்களை கிட்டங்கியில் பாதுகாப்பாக வைத்திருந்து, விலையேற்றத்தின் போது விற்பனை செய்து கொள்ளலாம். மேலும் இங்கு இருப்பு உள்ள விவசாய பொருட்களின் மதிப்பிற்கு வங்கிகளில் கடன் பெற்று கொள்ளலாம். மானாமதுரையை சுற்றிலும் தற்போது பருத்தி அதிக அளவு விளைச்சல் கண்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்களது பொருட்களை இங்கு இருப்பு வைத்து கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் விவசாய விளைபொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக தற்போது 2 அடுக்கு வசதியுடன் 6 ஆயிரத்து 490 சதுர அடியில் கூடுதல் கிட்டங்கி கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி ஆயிரம் மெட்ரிக் டன் பொருட்கள் இருப்பு வைத்து கொள்ளும் அளவிற்கு ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மானாமதுரை நான்குவழிச்சாலை அருகே கிட்டங்கி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை அதிகாரிகள் காதர், இளங்கோவன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து கிட்டங்கி கட்டும் பணி தொடங்கியுள்ளது.

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ஒரு ஆண்டிற்குள் கட்டுமான பணிகள் முடிந்து, கிட்டங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நான்கு வழிச்சாலை அருகே இந்த குடோன் இருப்பதால் விவசாயிகள் எளிதில் தங்கள் பொருட்களை கொண்டு வந்து வைத்து எடுத்து செல்லலாம் என்றனர்.


Next Story