ஆசிரியை கண்டித்ததால் விபரீதம்: பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி


ஆசிரியை கண்டித்ததால் விபரீதம்: பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 30 Sept 2018 5:30 AM IST (Updated: 30 Sept 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்–1 மாணவி பள்ளியின் 2– வது மாடியில் இருந்து குதித்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இருளாண்டி. டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக இருக்கிறார். இவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் கடைசி மகளான நர்மதா (வயது16) அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.

பள்ளியில் தேர்வு முடிந்து அனைவருக்கும் விடைத்தாள் கொடுக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற நர்மதா, விடைத்தாளில் மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்ததில் தாமாகவே திருத்தம் செய்ததாக தெரிகிறது. இதனைபார்த்த ஆசிரியை அவரை கண்டித்துள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியையிடம் புகார் தெரிவிக்க நர்மதாவை மாடியில் உள்ள அறைக்கு அழைத்துச்சென்றதாக தெரிகிறது.

கட்டிடத்தின் 2– வது மாடி வராண்டாவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் நர்மதா மேலே இருந்து கீழே குதித்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ந்து போன ஆசிரியை கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அனைவரும் ஓடோடி வந்தனர்.

மாடியில் இருந்து கீழே குதித்ததில் நர்மதாவின் கால்கள் முறிந்ததோடு முதுகுபகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடிதுடித்த அவரை உடனடியாக அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி மாடியில் இருந்து குதித்த நிலையில் அவரது பெற்றோருக்கு உண்மையான தகவலை தெரிவிக்காமல் பள்ளியில் வழுக்கி விழுந்து காயம் அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்த இருளாண்டி, பள்ளி நிர்வாகம் உண்மையை மறைத்ததாகவும், வேதியியல் துறை ஆசிரியை கண்டித்து திட்டியதால் தனது மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story