ராமநாதபுரத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான்; கலெக்டர் பங்கேற்பு
தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின்கீழ் ராமநாதபுரத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் யூனியன் அலுவலகத்தில் தொடங்கி பழைய பஸ் நிலையம், பாரதி நகர், டி–பிளாக் வழியாக 5 கிலோ மீட்டர் பயணித்து பட்டணம்காத்தான் நான்கு வழிச்சாலையில் நிறைவு பெற்றது. இப்போட்டியில் 2000–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள், இளைஞர்கள், 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் இந்த மாரத்தானில் கலந்து கொண்டு 5 கிலோ மீட்டர் ஓடினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:– மத்திய–மாநில அரசுகள் மகாத்மா காந்தியின் 150–வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் தூய்மை பாரத இயக்கம் என்ற திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தமிழகத்தை முதல்–அமைச்சர் ஆணையின்படி முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு நமது மாவட்டத்தை எடுத்துக்காட்டாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகளிலும் தூய்மைப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரத்தில் தூய்மையே சேவை – விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இந்த மாரத்தான் மூலம் நமது மாவட்டத்தில் உள்ள 15 லட்சம் மக்களுக்கு முழுசுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதுதவிர பொதுமக்கள் ஒவ்வொருவரும் குப்பைகளை மொத்தமாக கொட்டாமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதற்கென உள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும். மேலும் பொதுமக்கள் தாங்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து பராமரிக்க வேண்டும். வீடு, பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் கழிப்பறை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாரத்தான் போட்டியில் 35 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் லோகேஸ் முதலிடத்தையும், பிரசாத் 2–வது இடத்தையும், வைத்தீஸ் முருகன் 3–வது இடத்தையும் பெற்றனர். இதேபோல 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் சரவணன் முதல் இடத்தையும், நாகநாதன் 2–வது இடத்தையும், தட்சிணாமூர்த்தி 3–வது இடத்தையும் பெற்றனர். 35 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் லெட்சுமி முதல் இடத்தையும், ஸ்ரீவித்யா 2–வது இடத்தையும், மதுமதி 3–வது இடத்தையும் பெற்றனர். 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் மரியா ஆக்னஸ் முதல் இடத்தையும், பைக்யின் 2–வது இடத்தையும், அழகுராணி 3–வது இடத்தையும் பெற்றனர்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமாலினி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாகேசுவரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பிராங்பால் ஜெயசீலன்,யூனியன் ஆணையாளர்கள் ராமநாதபுரம் உம்முல்ஜாமியா, மண்டபம் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமநாதபுரம் பெருமாள், மண்டபம் ராஜா, ஊராட்சி செயலர்கள், பல்வேறு யூனியன் அலுவலர்கள், அரசு அதிகாரிகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.