மறைமலைநகர் அருகே ரூ.20 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்


மறைமலைநகர் அருகே ரூ.20 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Sept 2018 2:16 AM IST (Updated: 30 Sept 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

மறைமலைநகர் அருகே ரூ.20 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே நேற்று முன்தினம் இரவு மறைமலை நகர் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். செட்டிபுண்ணியம் ரெயில்வே கேட் அருகே போலீசார் ரோந்து செல்லும் போது அந்த வழியாக வந்த மினி டெம்போவில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த கடத்தல்காரர்கள் போலீசார் வருவதை கண்டதும் உடனே சாலை ஓரமாக மினி டெம்போவை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இதனைபார்த்த போலீசார் மினிடெம்போவின் அருகில் சென்று பார்த்த போது தக்காளிகள் ஏற்றி வரும் பிளாஸ்டிக் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

செம்மரக்கட்டைகள்

சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காலி பெட்டிகளை அகற்றியபோது அதற்கு அடியில் ஏராளமான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செம்மரக்கட்டைகளுடன் அந்த மினி டெம்போவை மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து செம்மரக்கட்டைகளை பார்வையிட்டனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மரக்கட்டைகளை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? எங்கு வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகள் இவை என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ரூ.20 லட்சம்

இது குறித்து போலீசார் கூறுகையில்:-

பிடிப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும், கடத்தல்காரர்கள் இதே போல ஏராளமான செம்மரக்கட்டைகளை மறைமலைநகர் அருகே ஏதாவது குடோனில் பதுக்கி வைத்துள்ளார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட இடத்தில் இருந்த செம்மரங்கள் வெட்டி மர்மநபர்களால் கடத்தப்பட்டது.

இதற்கும் இப்போது பிடிபட்ட செம்மரக்கட்டை கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story