தாளவாடி அருகே வாழைத்தோட்டத்துக்குள் புலி புகுந்தது


தாளவாடி அருகே வாழைத்தோட்டத்துக்குள் புலி புகுந்தது
x
தினத்தந்தி 30 Sept 2018 4:00 AM IST (Updated: 30 Sept 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே வாழைத்தோட்டத்துக்குள் புலி புகுந்தது. வனத்துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்டது மெட்டல்வாடி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி. விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் வாழை, கரும்பு சாகுபடி செய்துள்ளார்.

நேற்று காலை வழக்கம்போல் வாழை தேட்டத்திற்கு சென்றார். அப்போது ஏதோ ஒரு விலங்கு உறுமும் சத்தம் கேட்டது. இதனால் அச்சம் அடைந்த நஞ்சுண்டசாமி ஓடிச்சென்று அக்கம் பக்கத்து தோட்டத்தில் இருந்த விவசாயிகள் கணேசன், ஆறுமுகம் ஆகியோரை உதவிக்கு அழைத்து வந்தார்.

3 பேரும் சேர்ந்து உறுமல் சத்தம் வந்த இடத்துக்கு சென்றபோது அதிர்ச்சி அடைந்தார்கள். அங்கு ஒரு புலி படுத்து இருந்தது. இதனால் 3 பேரும் அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். உடனே இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் வாழைத்தோட்டத்துக்குள் எச்சரிக்கையுடன் நுழைந்தார்கள். பிறகு அங்கு பதிவாகியிருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது திடீரென தோட்டத்தை ஒட்டியிருந்த புதர் மறைவில் இருந்து மீண்டும் புலியின் உறுமல் சத்தம் கேட்டது. உடனே வனஊழியர்களும், பொதுமக்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் அப்போது வனஊழியர் சிவக்குமார் கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்தநிலையில், புதரில் இருந்து வெளியே வந்த ஒரு புலி வாழை தோட்டத்துக்குள் வந்து படுத்துக்கொண்டது. உடனே வனத்துறையினர் விவசாயிகளிடம், ‘இப்போது புலியை விரட்டவேண்டாம். இரவு நேரத்தில் தானாக வனப்பகுதிக்கு சென்று விடும்‘. என்றார்கள்.

அதைக்கேட்ட விவசாயிகள் புலியை இப்போது விரட்டாமல் விட்டால் நாங்கள் எப்படி பயமின்றி தோட்டங்களுக்கு வரமுடியும். கண்முன்னே புலி படுத்துள்ளது. அப்படியே விட்டு விட்டு செல்ல முடியுமா? என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்தனர். அதனால் புலி அங்கிருந்து தோட்டத்தின் அருகில் உள்ள ஒரு ஓடை புதர் மறைவில் பதுங்கி கொண்டது. வனத்துறையினர் தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மாலை வரை புதரில் இருந்து வெளியே வருவதும், பின்னர் சுற்றிவிட்டு மீண்டும் புதருக்குள் செல்வதுமாக போக்கு காட்டியது. 6 மணி அளவில் பொதுமக்களுடன் திரண்டு வனத்துறையினர் புதர் அருகே பட்டாசு வெடித்தார்கள். அப்போது வெளியே வந்த புலி சர்வ சாதாரணமாக வாழைத்தோட்டத்தை ஒட்டியிருந்த ரோட்டில் நடந்து சென்றது. அப்போது பொதுமக்களும், வனத்துறையினரும் விடாமல் விரட்டினார்கள். அதைத்தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு புலி காட்டுக்குள் சென்றது.


Next Story