வருங்காலத்தில் தனியார் நிறுவனங்கள் செயற்கை கோள்களை தயாரித்து விண்ணுக்கு அனுப்பும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
வருங்காலத்தில் தனியார் நிறுவனங்கள் செயற்கை கோள்களை தயாரித்து விண்ணுக்கு அனுப்பும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் நந்தா கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கான ‘இன்ஸ்பைர்’ அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நேற்று தொடங்கியது. முகாமை இஸ்ரோ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்து பேசினார்.
முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:–
கடந்த காலங்களில் இந்தியா செயற்கைகோள்கள் தயாரிப்பதிலும், அவற்றை விண்ணுக்கு அனுப்பவதிலும் வெளிநாடுகளை சார்ந்து இருந்தது. அந்த நிலை தற்போது மாறிவிட்டது. இந்தியா தயாரித்த செயற்கைகோள்கள் சிக்கனமாகவும், சிறப்பாகவும் செயல்படுவதால் வெளிநாடுகள் தங்கள் தேவைகளை இந்தியாவின் மூலம் பூர்த்தி செய்து வருகின்றன.
தற்போது செயற்கைகோள்களை அரசு அனுப்பி வருகிறது. வருங்காலங்களில் தனியார் நிறுவனங்கள் செயற்கைகோள்களை தயாரித்து விண்ணுக்கு அனுப்பும் நிலை வர உள்ளது. எனவே அதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் மாணவ–மாணவிகளை உருவாக்க வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் என்ஜினீயரிங் மாணவர்கள் விண்வெளித்துறையிலும் சாதிக்க முடியும். எனவே தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான செயற்கைகோள் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ–மாணவிகளை தயார்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.