இஸ்ரோவுடன், பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்தம் செயற்கைகோள் படங்கள் மூலம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டம்


இஸ்ரோவுடன், பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்தம் செயற்கைகோள் படங்கள் மூலம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2018 3:15 AM IST (Updated: 30 Sept 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

செயற்கைகோள் படங்கள் மூலம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டத்திற்காக இஸ்ரோவுடன் பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

பெங்களூரு, 

செயற்கைகோள் படங்கள் மூலம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டத்திற்காக இஸ்ரோவுடன் பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

இஸ்ரோவுடன் ஒப்பந்தம்

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்படுவது, ஏரிகள், கால்வாய்கள் உள்பட நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது. குப்பைகளை கண்டகண்ட இடங்களில் மலைபோல் குவித்து வைப்பது, சாலை பள்ளங்கள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பிரச்சினைகள் மட்டும் குறைந்தபாடில்லை.

இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) உதவியை நாடியுள்ளது. அதன்படி, பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியின் நிலஅமைப்பியல் படங்களை இஸ்ரோ செயற்கைகோள் உதவியுடன் அனுப்ப உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டில் இஸ்ரோ மற்றும் பெங்களூரு மாநகராட்சி இடையே கையெழுத்தானது.

அடுத்த ஆண்டு அமல்

இந்த ஒப்பந்தப்படி அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் முதல் இஸ்ரோ, செயற்கைகோள் மூலம் பெங்களூரு மாநகராட்சியின் 198 வார்டுகளின் நில அமைப்பியலை செயற்கைகோள் படங்களாக எடுத்து ஒவ்வொரு 6 மாதத்துக்கும் அனுப்பும். இந்த படத்தை பெங்களூரு மாநகராட்சி வரைபடத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்து, ஏரி-கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா?, விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா? என்பதை ஆராய்வார்கள்.

அப்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால், அவற்றை மீட்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இதுதவிர, சாலை பள்ளங்கள் இருக்கும் இடத்தை அதிகாரிகள் அறிந்து கொண்டு அதை சரிசெய்யவும் முயற்சி மேற்கொள்ள செயற்கைகோள் படங்கள் உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதுபற்றி பெங்களூரு மாநகராட்சி திட்ட சிறப்பு கமிஷனர் மனோஜ் மீனா கூறுகையில், ‘மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்புகளை கண்டுபிடிக்க இத்திட்டம் பெரிதும் உதவும். இந்த புதிய திட்டம் பற்றி ஏற்கனவே நடத்திய ஆலோசனையில் செயற்கைகோள் அனுப்பிய சில படங்களை நாங்கள் பார்த்து உள்ளோம்‘ என்றார்.

Next Story