தேனி–விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் திட்டம்: வனத்துறை முட்டுக்கட்டையால் கிடப்பில் போடப்பட்ட மலைப்பாதை


தேனி–விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் திட்டம்: வனத்துறை முட்டுக்கட்டையால் கிடப்பில் போடப்பட்ட மலைப்பாதை
x
தினத்தந்தி 30 Sept 2018 4:00 AM IST (Updated: 30 Sept 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

வனத்துறை முட்டுக்கட்டையால், தேனி–விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் மலைப்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கடமலைக்குண்டு,

தேனி மாவட்டத்தையும், விருதுநகர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் 120 கி.மீ. தூரம் மலைப்பாதை அமைக்க கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இந்த மலைப்பாதை அமைக்கப்பட்டால் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் இருந்து தேனி, போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக செல்ல முடியும்.

எனவே இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 2 மாவட்ட மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தேனி–விருதுநகர் மலைப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கின. அதன்படி வருசநாட்டில் இருந்து மாவட்ட எல்லையான காமராஜபுரம் அருகே உள்ள பாலசுப்பிரமணியபுரம் வரை முறையாக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல விருதுநகரில் இருந்து மாவட்ட எல்லையான கிழவன்கோவில் வரையிலும் பாதை அமைக்கப்பட்டது. இடைப்பட்ட கிழவன்கோவில்–பாலசுப்பிரமணியபுரம் இடையேயான 3 கி.மீ. தூரமுள்ள சாலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வருகிறது.

இந்த வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் அதிகம் இருப்பதாக காரணம் கூறி வனத்துறையினர் தொடர்ந்து இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ஆனால் மலைப்பாதை அமைக்க வேண்டிய இடத்தில் அடர்த்தியான மரங்கள் எதுவும் இல்லை.

இந்த மலைப்பாதை அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். அந்த குழுவினர் எடுக்கும் முடிவே இறுதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து அந்த குழுவினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு நடத்திவிட்டு சென்றனர். பின்னர் இந்த திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த மலைப்பாதை அமைக்கப்படும் பட்சத்தில் கடமலை–மயிலை ஒன்றியம் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும் என்பதால் இந்த பகுதி மக்கள் இந்த திட்டத்தை பெரிதும் விரும்புகின்றனர். மலைப்பாதை அமைக்கப்படாவிட்டாலும் 2 மாவட்ட மக்களும் நடைபயணமாக சென்று வருகின்றனர்.

காமராஜபுரம் பகுதியில் விளையும் கொட்டை முந்திரி உள்ளிட்ட விளைபொருட்களை மலைப்பாதையின் வழியாக நடந்து சென்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி, வத்ராயிருப்பு போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே 2 மாவட்ட மக்களின் நலன்கருதி மலைப்பாதை திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story