விராலிமலை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற தாசில்தார் கார் விபத்தில் பலி


விராலிமலை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற தாசில்தார் கார் விபத்தில் பலி
x
தினத்தந்தி 30 Sept 2018 7:22 AM IST (Updated: 30 Sept 2018 7:22 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற தாசில்தார் கார் விபத்தில் பலியானார். மேலும் வருவாய் ஆய்வாளர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

விராலிமலை, 

புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 52). இவர் விராலிமலை தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விராலிமலை அருகே உள்ள கோரையாற்றில் சிலர் மணல் கடத்துவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் பார்த்திபன், வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை(42), அலுவலக உதவியாளர் மதியழகன்(33), கிராம உதவியாளர் பால்ராஜ்(37), டிரைவர் சரவணன் ஆகியோருடன் காரில் விராலிமலை அருகே உள்ள வில்லாரோடை பகுதிக்கு சோதனை நடத்த சென்றார். அங்கு சென்று பார்த்தபோது மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த யாரும் அங்கு இல்லை. இதனால் அவர்கள் நேற்று அதிகாலை மீண்டும் அதே காரில் விராலிமலையில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

விராலிமலை ராஜகிரி குளவாய்பட்டி அருகே விராலிமலை-கீரனூர் சாலையில் வந்தபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து, சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் காரில் இருந்த தாசில்தார் பார்த்திபன், வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, அலுவலக உதவியாளர் மதியழகன், கிராம உதவியாளர் பால்ராஜ், டிரைவர் சரவணன் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர்.

இதில் காரில் இருந்த 5 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபய குரல் எழுப்பினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக விராலிமலை போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டனர். தாசில்தார் பார்த்திபனை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாசில்தார் பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த வருவாய் ஆய்வாளர் முத்துகாளை, அலுவலக உதவியாளர் மதியழகன் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கிராம உதவியாளர் பால்ராஜ், டிரைவர் சரவணன் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கும் போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான தாசில்தார் பார்த்திபனுக்கு, செல்வக்குமாரி என்ற மனைவியும், கீர்த்திகா என்ற மகளும், யோகேஸ், தீபக்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

புதுக்கோட்டை காந்திநகரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற அவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story