புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்


புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
x

புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.

நேற்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் நாமக்கல் மட்டும் இன்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு, சாமிதரிசனம் செய்தனர். இதேபோல் நேற்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டன.

Next Story