புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 2-வது சனிக் கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுநடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி நகரில் உள்ள கோட்டை பரவாசுதேவசாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி பெருமாள் கோவில், குமாரசாமிபேட்டை சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தர்மபுரி எஸ்.வி. ரோடு அபய ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில் புரட்டாசி 2-வது சனிக் கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுரியை அடுத்த அளேதர்மபுரி வரதகுப்பம் வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த கோவில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செட்டிக்கரை சென்றாயபெருமாள்சாமி கோவிலில் சாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று தர்மபுரியை அடுத்த மூக்கனூர் ஆதிமூல வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரியை அடுத்த அதகப்பாடியில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் உற்சவருக்கு சிறப்பு ஆராதனையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாலக்கோடு அருகே உள்ள பேடரஅள்ளி ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று மொரப்பூர் அருகே உள்ள மணியம்பாடி வெங்கட்ரமணசாமி கோவிலில் சாமிக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகம், சந்தன அபிஷேகம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போடுவராய சாமி பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள்சாமி கோவில், ஆட்டுக்காரம்பட்டி ராதேகிருஷ்ணா பிருந்தாவனம் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்து வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story