புதுடெல்லியில் அடுத்த மாதம் ரஷ்ய மாணவர்களுடன் மனித வாழ்நாள் அதிகரிப்பது தொடர்பாக கலந்துரையாடல் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை


புதுடெல்லியில் அடுத்த மாதம் ரஷ்ய மாணவர்களுடன் மனித வாழ்நாள் அதிகரிப்பது தொடர்பாக கலந்துரையாடல் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
x
தினத்தந்தி 30 Sept 2018 7:38 PM IST (Updated: 30 Sept 2018 7:38 PM IST)
t-max-icont-min-icon

மனித வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பாக புதுடெல்லியில் அடுத்த மாதம் ரஷ்ய நாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

ஈரோடு,

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆண்டு தோறும் பள்ளிக்கூட மாணவ –மாணவிகளுக்கான அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 150 மாணவ–மாணவிகளுக்கு ‘இன்ஸ்பையர்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் திறன் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வருகிற அக்டோபர் 3–ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமின் தொடக்க விழா நடந்தது.

விழாவுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ஐ.ஐ.டி. என்றால் இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஐ.ஐ.டி. என்பது ஆங்கிலத்தில் இன்வால்வ்மென்ட், இன்னோவேசன், டீம் ஒர்க் என்று நான் கூறுகிறேன். மாணவர்கள் எங்கு படித்தாலும் எதை படித்தாலும் இதில் முழு ஈடுபாட்டோடு அதாவது இன்வால்வ்மென்டோடு படிக்க வேண்டும்.

அடுத்த மாதம் புதுடெல்லியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த, தேர்ந்து எடுக்கப்பட்ட 20 மாணவ–மாணவிகளுடன் மனித வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, பரீட்சார்த்த முறையில் உங்களோடு கலந்துரையாட இருக்கிறேன்.

தற்போது தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. போர் தொடர்பான அச்சம் இருந்தாலும், போர்கள் நடைபெறாமல் தவிர்க்கும் நிலை உள்ளது. பசி இருந்தாலும் பட்டினியால் மரணம் என்பது இல்லை. எனவே இந்த 3 முக்கிய காரணிகளும் மனித வாழ்நாளை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

நான் இஸ்ரோவில் பணியில் சேர்ந்த போது இந்தியாவில் இருந்து நமது செயற்கைகோள்களை அனுப்பும் வசதி இல்லை. வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் செயற்கைகோள்களை நாம் நமது அறையில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் நிலை இருந்தது. அப்போது நான், நாம் ஒரு ‘சிமிலேட்டர் மெசின்’ செய்ய வேண்டும் என்று இஸ்ரோ தலைவரிடம் கூறினேன்.

மற்றவர்கள் கேலியாக பார்த்தபோது, அந்த திட்ட தயாரிப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. 4 ஆண்டுகள் உழைத்து உருவாக்கினோம். பிற்காலத்தில் சந்திராயன், மங்கள்யான் போன்றவை திட்டமிட்ட காலத்தில் சரியாக ஏவப்பட்டு சாதனை புரிந்தோம் என்றால், அடிப்படை அந்த சிமிலேட்டர் மெசின்தான்.

இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.


Next Story