சேதராப்பட்டில் கிராமப்புற இணைய சேவை திட்டத்தை எம்.பி.க்கள் குழு ஆய்வு


சேதராப்பட்டில் கிராமப்புற இணைய சேவை திட்டத்தை எம்.பி.க்கள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 30 Sept 2018 7:59 PM IST (Updated: 30 Sept 2018 7:59 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டில் கிராமப்புற இணைய சேவை திட்ட செயல்பாடுகளை, பொதுத்துறை நிறுவனங்களுக்கான எம்.பி.க்கள் குழு நேற்று ஆய்வு செய்தது.

காலாப்பட்டு,

மத்திய அரசின் கிராமப் புறங்களுக்கான இணைய சேவை வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை பொதுத்துறை நிறுவனங்களுக்கான எம்.பி.க்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இந்த திட்டம் பொது சேவை மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்வதற்காக குமார் ஸ்ரீசந்தா எம்.பி. தலைமையில் 25 எம்.பி.க்களை கொண்ட குழு ஒன்று நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வந்தது.

இந்தக் குழுவினர் நேற்றுக்காலை மொத்தம் 3 குழுக்களாக பிரிந்து சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அதில் ஒரு குழு சேதராப்பட்டு மந்தைவெளியில் தனியார் மூலம் இயங்கும் பொது சேவை மையம், குரும்பாபேட் பொது சேவை மையம், தொண்டமாநத்தம் பொது சேவை மையம் ஆகியவற்றுக்கு சென்று, கிராமப்புற இணைய சேவை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தது.

பாரத அகன்ற வரிசை இணைய நிறுவனம் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ஒளியிழை இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி கிராம பஞ்சாயத்தில் இருந்து பொது சேவை மையங்கள் மூலம் வை பை இணைய சேவை வழங்கப்படுகிறது. இந்த திட்ட செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்று எம்.பி.க்கள் குழு ஆய்வு செய்தது.

பின்னர் தொண்டமாநத்தத்தில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேசனுக்கு ஒரே குழுவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story