பிரசவமான குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்ல பழைய வாகனத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து, பிரசவமான குழந்தைகளை வீட்டிற்கு இலவசமாக அழைத்து செல்ல பழைய வாகனத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த வாகனத்தில் வால்பாறைக்கு செல்ல 5 மணி நேரம் ஆவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி,
மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பிரசவமான தாய்மார்கள், கருத்தடை அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளை வீடுகளுக்கு இலவசமாக அழைத்து செல்ல ‘ஜனனி சுரக்ஷா காரியகிராம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் இந்த திட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
இதையடுத்து பிரசவமான குழந்தைகள், குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்த பெண்கள், சிகிச்சை பெற்ற பச்சிளம் குழந்தைகள் அவரவர் வீட்டிற்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த மாதம் வரை 2 ஆயிரத்து 317 குழந்தைகள் பிறந்து உள்ளனர். இதில் 2 ஆயிரத்து 198 பேரை வாகனத்தில் அழைத்து சென்று உள்ளனர். இதற்கிடையில் சிறப்பான இந்த திட்டத்திற்கு பழைய வாகனத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–
தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலம் ஜனனி சுரக்ஷா காரியகிராம் திட்டத்தின் கீழ் பிரசவமான தாய்மார்கள், கருத்தடை அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளை வீடுகளுக்கு இலவச வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 102 என்ற இலவச தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி முன் விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த பலகையில் உள்ள வாகனத்திற்கும், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டு உள்ள வாகனத்திற்கும் வித்தியாசமும் உள்ளது. புதிய வாகனத்தை வழங்காமல் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வாகனம், போக்குவரத்திற்கு தகுதியில்லாத வாகனம் என்று ஒதுக்கப்பட்டது ஆகும். பழைய வாகனத்தை புதுப்பித்து, வர்ணம் பூசி பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஒரு சிலர் இலவச வாகனத்தை பயன்படுத்தாமல், வாடகை கார் பிடித்து வீட்டிற்கு செல்கின்றனர். இந்த வாகனத்தில் 15 பேர் வரை சென்றால் தான் சோர்வு தெரியாது. இதுவரைக்கும் அதிகபட்சமாக 10 பேர் வரை தான் சென்று உள்ளனர். மேலும் வாகனம் செல்லும் போது அங்குமிங்கும் அலப்புவதால் வீட்டிற்கு செல்வதற்குள் குழந்தைகளும், பெண்களும் மிகவும் சோர்வு அடைந்து விடுகின்றனர்.
அதுவும் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லும் பெண்களின் நிலைமை படாதபாடு தான். வால்பாறைக்கு மற்ற வாகனங்களில் 3 மணி நேரங்களில் சென்று விடலாம். ஆனால் இந்த வாகனத்தில் செல்ல 5 மணி நேரத்திற்கு மேலாகி விடுகிறது. இதற்கிடையில் வால்பாறைக்கு செல்லும் போது சிலர் தான் வாகனத்தில் இருப்பார்கள். மலைப்பாதை என்பதால் வாகனங்கள் அங்மிங்கும் வளைந்து, வளைந்து செல்லும் ஒரு சிலர் இருக்கையை விட்டு கீழே விழுந்து விடும் நிலை ஏற்படுகிறது.
இதனால் பெரும்பாலும், வால்பாறை, டாப்சிலிப் போன்ற மலைப்பகுதிகளுக்கு வாகனம் இயக்கப்படுவதில்லை. எனவே இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய வாகனத்தை இயக்கினால், இன்னும் பலர் இலவச வாகனத்தை பயன்படுத்தி கொள்வார்கள். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதுகுறித்து மருத்துவ துறை அதிகாரிகள் கூறியதாவது:–
தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலம் ஜனனி சுரக்ஷா காரியகிராம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாகனத்தில் வரும் தாய்மார்களுடன் உதவியாளர் ஒருவர் உடன் வரலாம். 102 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினால் வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விடும். இதற்கு முன் 40 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டும் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது எத்தனை கிலோ மீட்டர் தூரம் வேண்டுமானாலும் செல்ல பயன்படுத்தி கொள்ளலாம். புதிய வாகனம் கேட்டு ஜனனி சுரக்ஷா காரியகிராம் திட்டத்தின் மாவட்ட அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் புதிய வாகனம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.
ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ளவர்கள் மற்றும் சொந்த வாகனம் வைத்து உள்ளவர்கள் தான் இலவச வாகனத்தை பயன்படுத்தப்படவில்லை. கடந்த ஒராண்டில் இந்த வாகனத்தை 80 சதவீதத்திற்கு மேலானோர் பயன்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.