ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காவிட்டால் 15–ந் தேதி மறியல்; பொதுமக்கள் அறிவிப்பு


ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காவிட்டால் 15–ந் தேதி மறியல்; பொதுமக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2018 3:00 AM IST (Updated: 1 Oct 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காவிட்டால் 15–ந் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சீதஞ்சேரியிலிருந்து வெங்கல் வரை 15 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலை உள்ளது. இந்த சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. குறிப்பாக வெங்கல் – ஆவாஜிபேட்டை இடையே 4 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் 4 அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. சாலை மோசமாக உள்ளதால் அடிக்கடி இந்த பஸ்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் முதியோர்கள், பள்ளி மாணவ– மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினத்தந்தியில் செய்தியும் வெளியானது. சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கூறப்பட்ட சாலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. இதனால் வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாலையை சீரமைக்க தமிழக அரசு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கிய ரூ.75 லட்சம் நிதி முடங்கி கிடக்கிறது.

சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) கிராமமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்யினர் வெங்கல் பஜார் தெருவில் சாலை மறியலில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று சமாதான கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் இளங்கோ தலைமை தாங்கினார். தலைமை எழுத்தர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சம்பத், கண்ணன், குமார், செல்வராஜ் மற்றும் கிராம மக்கள், நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினீயர் ராஜ்கமல், வனத்துறையை சேர்ந்த வனவர் சேகர் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சாலை அமைக்கும் விவகாரத்தில் மாவட்ட கலெக்டரை சந்தித்து பேச உள்ளதாகவும், ஆகையால் சாலை மறியல் போராட்டதை கைவிடுமாறும் தாசில்தார் இளங்கோவன் கேட்டு கொண்டார்.

வரும் 14–ந் தேதி வரை கால அவகாசம் அளிப்பதாகவும், அதன் பின்னரும் சாலையை சீரமைக்காவிட்டால் 15–ந் தேதி வெங்கல் பஜார் தெருவில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதிநிதிகள் தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளியேறினர்.


Next Story