தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தால் மத்திய அரசுக்கு பின்னடைவு - டி.டி.வி.தினகரன்
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தால் மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில், அரசு நடைமுறைபடி சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் என் பெயரை போட்டு உள்ளனர். உண்மையில் அந்த விழாவில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்றால் என்னிடம் கேட்டுவிட்டு பெயரை போட்டு இருப்பார்கள்.
கடந்த 2 மாதத்துக்கு முன்பே ஈரோட்டில் நடக்கும் அருந்ததியர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாக நான் தேதி கொடுத்து இருந்தேன். எம்.ஜி.ஆர். பெயரை வைத்து விளம்பரம் தேடி கொள்கின்றனர். அடிமைத்தனத்துக்கு எதிராக போராடிய எம்.ஜி.ஆர். மாவீரர். ஆனால் இது அடிமை அரசு.
எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி, அலுவலகம், இரட்டை இலை சின்னம் தங்களிடம் இருக்கிறது என்பதை காட்ட இந்த கூட்டத்தை நடத்துகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களை கட்டாயம் விழாவுக்கு வரவேண்டும் என்று கூறுகின்றனர். 2 நாள் சுற்றுலா என்று கூறி வெளியூர்களில் இருந்து ஆட்களை இலவசமாக வாகனங்களில் அழைத்து வருவதாக கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆர். விழாவுக்கு தானாக கூட்டம் வரவேண்டும். ஆனால் தற்போது கட்சிக்கு உயிர் இல்லை. தொண்டர்கள் இல்லை. அரசு வரிபணத்தை தங்கள் புகழுக்காக பயன்படுத்துகின்றனர்.
தமிழக காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க, விவசாய நிலமாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர். பூமிக்கடியில் வைரமே இருந்தாலும் தங்களுக்கு வேண்டாம் என்பதுதான் அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாகும். இந்த பகுதியில் விவசாயம்தான் செய்வோம். விவசாயம் தொழில் என்பதைவிட எங்கள் வாழ்க்கை முறை.
விவசாயம் வளம்பெறவும், செழிப்பாகவும் வழிகளை சொல்லாமல் பூமிக்கடியில் இருந்து நிலக்கரி, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், கியாஸ் எடுக்கிறோம் என்று சொல்லி எங்களை அகதிகளாக விரட்டப்பார்கிறார்கள் என்று மக்கள் மத்தியில் கொந்தளிப்பாக உள்ளது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் ஆகும். அப்படி செய்தால் மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். நாடாளுமன்ற தேர்தலில் இது பிரதிபலிக்கும்.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போதுதான் என்னுடைய ‘சிலிப்பர் செல்கள்’ வெளியே வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.