தேசிய அளவிலான சாலையோர ஸ்கேட்டிங் போட்டிக்கு 48 மாணவ-மாணவிகள் தேர்வு
கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான சாலையோர ஸ்கேட்டிங் போட்டிக்கு 48 மாணவ-மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.
பெரம்பலூர்,
பள்ளி கல்வித்துறை சார்பில் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்தும் மாணவ, மாணவிகளுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான சாலையோர ஸ்கேட்டிங் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே நேற்று நடைபெற்றது. இதில் 11, 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் வயது மற்றும் பிரிவு வாரியாக தனித்தனியே நடத்தப்பட்டது. போட்டியினை பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து மொத்தம் 140 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் 48 பேர் வருகிற டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் என்ற இடத்தில் நடை பெறும் தேசிய அளவிலான சாலையோர ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story