கடலூர் மத்திய சிறையில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த கைதியை கடத்தப்போவதாக மிரட்டல்


கடலூர் மத்திய சிறையில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த கைதியை கடத்தப்போவதாக மிரட்டல்
x
தினத்தந்தி 1 Oct 2018 3:15 AM IST (Updated: 1 Oct 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

கைதியை மீட்டு செல்ல போவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையெடுத்து கடலூர் மத்திய சிறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடலூர், 


சிரியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.சுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சென்னையில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அன்சர்மீரான் (வயது 29) என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

அதையடுத்து சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட் டார். இதற்கிடையில் புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு அன்சர்மீரான் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அன்சர் மீரானை, வருகிற 3-ந்தேதிக்குள் சிறையை தகர்த்து கடத்த இருப்பதாக மத்திய உளவுத்துறை போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இந்த மிரட்டலை தொடர்ந்து, மாநில உளவுத்துறை போலீசாரை உஷார்படுத்தி, தமிழக சிறைத்துறைக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நேற்று மாலை கடலூர் மத்திய சிறைக்கு வந்து சிறை அலுவலர்களுடன் அதிரடி சோதனை செய்தார். அப்போது கைதிகள் தங்கியுள்ள அறைகள், சிறைவளாகம் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.

மேலும் கடலூர் முதுநகர் போலீசார், மத்திய சிறைக்கு செல்லும் சாலையான வண்டிப்பாளையத்தில் நின்றபடி தீவிரமாக வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் படியாக யாரேனும் வாகனங்களில் செல்கிறார்களா? வெடி மருந்து போன்ற பொருட்களை எடுத்து செல்கிறார்களா? என்று தீவிரமாக சோதனை செய்தனர்.

இது தவிர கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மேற்பார்வையில் புதுநகர், முதுநகர் மற்றும் ஆயுதப்படை போலீசார் சிறையை சுற்றிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கண்ட தகவலை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story