ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு  உரிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Oct 2018 11:35 PM IST (Updated: 1 Oct 2018 11:35 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வு குழுவில் உரிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.

தூத்துக்குடி, 


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த மனுவில் கூறி இருப்பதாவது;-

ஓய்வுபெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் தூத்துக்குடிக்கு கடந்த மாதம் வந்தனர். அந்த குழுவிடம் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட கூடாது என மனு அளித்தனர். அதன்பின் சென்னையில் நடந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக 45 ஆயிரம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் வருகிற 5, 6-ந் தேதிகளில் சென்னையில் ஆய்வுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் தமிழக அரசு வாதிட உள்ளது. அப்போது நிலம், நீர், காற்று மாசுகாரணமாக ஏற்பட்டு உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், மக்களுக்கு ஏற்பட்டு உள்ள புற்றுநோய் உள்ளிட்ட சுகாதார பாதிப்புகள் தொடர்பாக மருத்துவ அறிக்கைகள் ஆகியவற்றை ஆதாரமாக வைத்து வாதிட வேண்டியது அவசியம்.

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆலை கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளிலும் உள்ள நிலம், நீர் நிலைகளில் உள்ளூர் மக்களின் முன், மாதிரிகள் எடுத்து ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பி அதன் அறிக்கைகளை ஆய்வு குழுவில் முன்வைக்க வேண்டும். 2013-ம் ஆண்டுக்கு பின் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையில் நடத்திய ஆய்வு அறிக்கைகளை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கியதில் இருந்து நடைபெற்ற முறைகேடுகள் விதிமுறை மீறல்கள், ஆலையில் நடந்த விபத்துகள், உயிரிழப்புகள், அருகாமை பகுதியில் ஏற்பட்ட மூச்சுதிணறல் உள்ளிட்ட சுகாதார பாதிப்புகள் ஆகியவற்றை பற்றிய தெளிவான விரிவான அறிக்கையினை மாவட்ட நிர்வாகம் தயார் செய்து தமிழக அரசு மூலம் ஆய்வு குழுவில் வைக்க வேண்டும். இதுபோன்ற உரிய ஆதாரங்களை குழுவின் முன் வைத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். 

Next Story