டீக்கடை தொழிலாளி கொலையில் ஒருவர் கைது
நெல்லை அருகே டீக்கடை தொழிலாளியை கொலை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள அழகநேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் முனியசாமி மகன் செந்தில்குமார் (வயது 33). இவர் தனது அண்ணன் முருகன் டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நெல் அறுவடை எந்திரத்துக்குள் செந்தில்குமாரின் ஒரு கை சிக்கி துண்டானது. இதையொட்டி அவர் திருமணம் செய்து கொள்ளாமல் சகோதரர் வீட்டின் அருகில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் செந்தில்குமார் வீட்டின் அருகில் உள்ள கால்வாய் கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பல் அவரை உருட்டுக்கட்டையால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டது.
இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் தனது நண்பர்களுடன் சென்று அடிக்கடி மது குடித்து உள்ளார். அப்போது அந்த பகுதியில் மீன் குத்தகைக்கு விடப்பட்ட குளத்தில் மீன் பிடித்து குழம்பு வைத்து சாப்பிடுவாராம். மேலும் யாருக்கும் தெரியாமல் மீன் பிடித்து விற்பனையும் செய்வாராம். இதனால் குளத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் இவரை சத்தம் போட்டு உள்ளனர். அதற்கு அவர்களை அவதூறாக பேசி உள்ளார். இது அழகநேரியை சேர்ந்த முருகன், செந்தில், விஜயகுமார், மகேந்திரன் ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இவர்கள் கால்வாய்கரையில் நின்ற செந்தில்குமாரிடம் சென்று மீன் பிடித்தது குறித்து கேட்டனர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், செந்தில்குமாரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட விஜயகுமாரை (35) கைது செய்தனர். முருகன்(40), செந்தில்(40), மகேந்திரன் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story