நெல்லை அண்ணா பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 921 பேருக்கு பட்டம் துணைவேந்தர் சூரப்பா வழங்கினார்
நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 921 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வழங்கினார்.
நெல்லை,
நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 921 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பல்கலைக்கழக வளாக கல்லூரி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கும் விழா நெல்லை அபிஷேகப்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள வ.உ.சி. அரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தலைமை தாங்கினார். நெல்லை அண்ணா பல்கலைக்கழக டீன் சக்திநாதன் வரவேற்று பேசினார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் இயக்குனரும், விஞ்ஞானியுமான எஸ்.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றினார்.
921 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
விழா மேடையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த 921 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 22 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டங்களை துணைவேந்தர் சூரப்பா வழங்கினார். பின்னர் அவர் உறுதிமொழி படிவத்தை படித்தார். அதை மாணவர்கள் திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் நெல்லை அண்ணா பல்கலைக்கழக டீன் சக்திநாதன் பேசியதாவது:-
தரமான கல்வி
நெல்லை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்கலைக்கழக வளாக கல்லூரி, தூத்துக்குடி, நாகர்கோவிலில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் தரமான கல்வி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மட்டும் அல்லாமல் முதுநிலை பட்டப்படிப்பும் கற்று கொடுக்கப்படுகிறது.
மாணவர்களின் உயர் கல்விக்கு இந்த கல்லூரிகள் அடித்தளமாக அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வி மட்டும் அல்லாமல் சமூகம் சார்ந்த அடிப்படை பிரச்சினைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். நெல்லை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் முதற்கட்டமாக 60 கிலோ மீட்டர் தூரம் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்து இருக்கிறார்கள்.
மானூர், பள்ளமடை குளத்துக்கு நேரடியாக சென்று தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளில் மாணவர்கள் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்கள். படிப்பை முடித்து விட்டு வெளியே செல்லும் போது இதுபோன்ற அனுபவங்கள் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அண்ணா பல்கலைக்கழக சென்னை உறுப்பு கல்லூரிகளின் மைய கூடுதல் இயக்குனர் எஸ்.முத்தன், தூத்துக்குடி என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, நாகர்கோவில் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் டி.வி.எஸ்.பிள்ளை, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story