ரூ.12 லட்சம் தங்க கம்பிகள் திருடிய வாலிபர் கைது
விழுப்புரத்தில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க கம்பிகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் வாணியர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 51), தங்க நகை தொழிலாளி. இவர் விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள அமராவதி விநாயகர் கோவில் தெருவில் நகை பட்டறை வைத்துள்ளார்.
இந்த கடையில் மேற்கு வங்காள மாநிலம் கூக்லி மாவட்டம் ஆரம்பாக் என்ற கிராமத்தை சேர்ந்த பெரோஸ் (32) என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் பாஸ்கரனிடம் நகை செய்வதற்காக சிலர் தங்கத்தை கொடுத்துள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி ரூ.12 லட்சம் மதிப்புள்ள 61 பவுன் எடையுள்ள தங்கத்தை உருக்கி கம்பிகளாக மாற்றி அவற்றை பெரோசிடம் கொடுத்து பீரோவில் வைக்கும்படி பாஸ்கரன் கூறினார்.
பின்னர் இரவில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டுவதற்கு முன்பு பீரோவில் இருக்கும் தங்க கம்பிகளை வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக அந்த பீரோவை பாஸ்கரன் திறந்தார். அப்போது பீரோவில் இருந்த தங்க கம்பிகளை காணவில்லை. அதனை கடையில் வேலை பார்த்த பெரோஸ் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து பாஸ்கரன் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து பெரோசை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் பெரோஸ் மேற்கு வங்காளத்தில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சப்-இன்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த பெரோசை கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் இருந்து 120 கிராம் நகை பறிமுதல் செய்யபட்டது.
Related Tags :
Next Story