ஆசிரியை வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை


ஆசிரியை வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 3 Oct 2018 3:15 AM IST (Updated: 2 Oct 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

வடலூர் அருகே ஆசிரியை வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வடலூர், 

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள தென்குத்து அண்ணாநகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி அமுதா (வயது 55). இவர் தம்பிப்பேட்டை பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் வினோத்குமார். புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமார் இறந்து விட்டார். இதனால் அமுதா, வினோத்குமார் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். இந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்குமார் கடலூரில் நடந்த விபத்தில் சிக்கி காயமடைந்தார். அதையடுத்து அவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து மகனை பார்ப்பதற்காக அமுதா தனது வீட்டை பூட்டி விட்டு அடிக்கடி புதுச்சேரிக்கு சென்று வந்தார். அதேபோல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரிக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

இதைத்தொடர்ந்து பீரோவில் தான் வைத்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை பார்த்தார். அவற்றை காணவில்லை. அவர் புதுச்சேரிக்கு சென்று வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவர் இல்லாத நேரத்தில் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மேலும் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் கடப்பாரையை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

இது பற்றி அமுதா வடலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்கள் விட்டு சென்ற கடப்பாரையை கைப்பற்றினர். இதற்கிடையில் தகவல் அறிந்து கடலூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் அமுதா வீட்டில் இருந்த முக்கிய தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியை வீட்டில் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story