வில்லேபார்லேயில் கிணற்றுக்குள் விழுந்து சிறுமி, 2 பெண்கள் பலி


வில்லேபார்லேயில் கிணற்றுக்குள் விழுந்து சிறுமி, 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 3 Oct 2018 3:29 AM IST (Updated: 3 Oct 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

வில்லேபார்லேயில் பூஜை செய்த போது கிணற்றுக்குள் விழுந்து சிறுமி உள்பட 2 பெண்கள் பலியாகினர்.

மும்பை,

மும்பை வில்லேபார்லே கிழக்கு தக்சித் ரோடு பகுதியில் வடமாநில பெண்களின் சிறப்பு பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். அதில் சிலர் அங்கிருந்த 30 அடி ஆழம் கொண்ட கிணற்றின் மேல் இரும்பு வலை மீது அமர்ந்தபடி பூஜை செய்துகொண்டு இருந்ததாக தெரிகிறது.

அப்போது திடீரென பாரம் தாங்காமல் அவர்கள் அமர்ந்திருந்த இரும்பு வலை உடைந்து கிணற்றில் விழுந்தது. இதனால் அதன் மேல் அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் கிணற்றுக்குள் விழுந்தனர். அவர்கள் உதவி கேட்டு கூக்குரலிட்டனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில் அங்கு விரைந்து வந்த அவர்கள், கிணற்றில் விழுந்த 2 பெண்கள், 3 வயது சிறுமி, சிறுவர்கள் உள்பட 5 பேரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள வி.என். தேசாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு படுகாயமடைந்த 3 வயது சிறுமி உள்பட 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மற்ற சிறுவர்கள் 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில், பலியான 3 வயது சிறுமியின் பெயர் திவ்யா என்பதும், பெண்கள் மாதவி (49), ரேணு (20) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூஜை செய்தபோது கிணற்றுக்குள் விழுந்து 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story