திசையன்விளை அருகே பயங்கரம்: வாலிபர் காரில் கடத்திக்கொலை 5 பேரை பிடித்து போலீஸ் விசாரணை


திசையன்விளை அருகே பயங்கரம்: வாலிபர் காரில் கடத்திக்கொலை 5 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 Oct 2018 1:30 PM IST (Updated: 3 Oct 2018 1:30 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே வாலிபர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை, 

திசையன்விளை அருகே வாலிபர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையை சேர்ந்தவர் கணபதி பாண்டியனின் மகன் சந்தோஷ் ராஜா (வயது 32). இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சந்தோஷ் ராஜா, திருப்பூரில் உள்ள தனது நண்பருடன் சேர்ந்து மிக்சி ஏஜெண்டு எடுத்து தொழில் செய்து வந்ததாகவும், அதில் கிடைத்த வருமானத்தை மது குடித்து செலவழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் ஏற்பட்ட தகராறில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே சந்தோஷ் ராஜாவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

மேலும் சந்தோஷ் ராஜாவின் அத்தை வீடும் ஆறுமுகநேரியில் தான் உள்ளது. இதனால் சந்தோஷ் ராஜா ஆறுமுகநேரிக்கு அடிக்கடி சென்று வந்த சமயத்தில் அங்குள்ள வேறு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணுடன் முகநூலிலும் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சந்தோஷ் ராஜாவின் பெற்றோர் நெல்லையில் உள்ள இளைய மகனின் வீட்டிற்கு சென்று விட்டனர்.

காரில் கடத்தி கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் 5 பேர், சந்தோஷ் ராஜாவின் வீட்டுக்கு வந்தனர். திபுதிபுவென காரில் இருந்து இறங்கிய அவர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் சந்தோஷ் ராஜாவை வலுக்கட்டாயமாக தங்களது காரில் ஏற்றி சாத்தான்குளம் நோக்கி கடத்திச்சென்றனர். செல்லும் வழியிலேயே சந்தோஷ் ராஜாவை அவர்கள் 5 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அவர்களே காரில் கொண்டு சென்று சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சென்று விட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தோஷ் ராஜா இரவு இறந்தார்.

5 பேரை பிடித்து விசாரணை

இதுகுறித்து நெல்லையில் உள்ள சந்தோஷ் ராஜாவின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் சந்தோஷ் ராஜா கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆறுமுகநேரியை சேர்ந்த சிவராமன், தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ், சங்கரமூர்த்தி, பூவேஸ், பாலா ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வாலிபர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story