டீசல் விலையை குறைக்கக்கோரி மீனவர்கள் வேலை நிறுத்தம் 2 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை


டீசல் விலையை குறைக்கக்கோரி மீனவர்கள் வேலை நிறுத்தம் 2 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 4 Oct 2018 4:30 AM IST (Updated: 4 Oct 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

டீசல் விலையை குறைக்கக்கோரி தஞ்சை மாவட்ட மீனவர்களின் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. 2 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் 301 விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். டீசல் விலை உயர்வால் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை இயக்க சிரமப்பட்டு வருகிறார்கள்.

எனவே டீசல் விலையை குறைக்க வேண்டும். விசைப்படகுகளுக்கு உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்டு பழுதடைந்துள்ள விசைப்படகுகளுக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

தொழில் நஷ்டத்தால் மீன் பிடித்தொழில் செய்ய முடியாமல் தடுமாறி வரும் மீனவர்களின் விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு அவர்கள் மாற்று தொழில் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக 13 மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அறிவித்தனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். நேற்று 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக விசைப்படகுகள் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விசைப்படகு மீனவர்கள் இதுவரை அவரவர் விருப்பத்திற்கேற்ப மாவட்டம் வாரியாக வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை நடத்தி வந்தோம். அதில் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எனவேதான் தற்போது 13 மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

இதில் தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் விசைப்படகுகள் கலந்து கொள்கின்றன. இதன் காரணமாக மீன்பிடி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோரிக்கைகளை ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றா விட்டால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களையும் ஒன்று திரட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

வருகிற 8-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி, அடையாள அட்டை மற்றும் படகு பதிவு புத்தகத்தை திரும்ப ஒப்படைக்க உள்ளோம். அடுத்தபடியாக அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்போடு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story