முக்கொம்பு கொள்ளிடம் அணை மதகுகள் உடைப்பு: தற்காலிக சீரமைப்பு பணி 2 வாரங்களில் நிறைவடையும்


முக்கொம்பு கொள்ளிடம் அணை மதகுகள் உடைப்பு: தற்காலிக சீரமைப்பு பணி 2 வாரங்களில் நிறைவடையும்
x
தினத்தந்தி 3 Oct 2018 11:00 PM GMT (Updated: 3 Oct 2018 7:31 PM GMT)

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணி 2 வாரங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணித்துறை கண்காணிப்பு அதிகாரி கூறினார்.

ஜீயபுரம்,

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி உடைப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் தொடங்கி சுமார் 40 நாட்கள் ஆகியும் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. மணல் மூட்டைகள் அடுக்கியும், பெரிய பாறாங்கற்களை போட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்படுத்திய தடுப்புகள் வழியாக தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் அவதூறாக பேசியதாக கூறி மணல் மூட்டை அடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் திடீர் என தங்களது வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பொதுப் பணித்துறையின் காவிரி படுகை கடைமடை பகுதி கண்காணிப்பு அதிகாரி பாலாஜி நேற்று தற்காலிக சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக முக்கொம்புக்கு வந்தார். அப்போது மாற்று தொழிலாளர்கள் மூலம் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரிடம் எடுத்துக்கூறினார்கள்.

ஆய்வுக்கு பின்னர் அதிகாரி பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கொள்ளிடம் அணையின் தற்காலிக சீரமைப்பு பணிகளை விரைவாக முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில் தற்காலிக சீரமைப்பு பணி நிறைவடையும். காவிரி கடைமடை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளேன். கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விவசாயிகள் பயன் அடையும் வகையில் தண்ணீர் கடைமடை பகுதிக்கு சென்று அடையும்’ என்றார்.

முன்னதாக முக்கொம்பில் அதிகாரி பாலாஜி விவசாய சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் புலியூர் நாகராஜன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் உள்பட விவசாய சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும், பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கரை காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாய்க்கால்களில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் விரைவாக சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும், முக்கொம்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டும் பணியை விரைவாக தொடங்க வேண்டும் என கோரி அவர்கள் மனு கொடுத்தனர்.

Next Story