காதலியுடன் பொக்லைன் ஆபரேட்டர் தற்கொலை
ஓமலூர் அருகே, திருமணம் செய்து வைக்க உறவினர்கள் மறுத்ததால் காதலியுடன் பொக்லைன் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓமலூர்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் ரத்தினப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கொழந்தை. இவரது மகன் தங்கபாலு (வயது 24). இவர் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா மோளக் கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கி பொக்லைன் எந்திரம் ஓட்டி வந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரது மகள் மைனாவதி (16) என்ற சிறுமியுடன் தங்கபாலுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மைனாவதி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது பழக்கம், மைனாவதியின் வீட்டுக்கு தெரியவரவே, அவரது பெற்றோர் அவரை பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டனர். பின்னர் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கபாலு, விடுதிக்கு சென்று மைனாவதியை அழைத்துக் கொண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊமைக்கவுண்டம்பட்டி பகுதியில் வசித்து வரும் தனது அக்காள் ஜெயா (27) வீட்டுக்கு வந்து, இரவு அங்கு தங்கினார். பின்னர் தனக்கு மைனாவதியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.
இதற்கு ஜெயாவும், அவரது கணவர் பிரகாசும் இதுகுறித்து பெரியவர்களிடம் பேசிதான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் திருமணம் செய்து வைக்க முடியாது என்று தெரிவித்து உள்ளனர். பிரகாசுக்கு சொந்தமான வீடு அதே பகுதியில் உள்ள ஊமைகவுண்டம்பட்டி காட்டு வளவில் உள்ளது. அந்த வீட்டில் தற்போது பிரகாசின் தாயார் மாதம்மாள் வசித்து வந்தார். அந்த வீட்டின் மேல் பகுதி திறந்தவெளியாக இருந்தது. நேற்று காலை மாதம்மாள் பாய் தறி ஓட்டும் வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் காட்டு பகுதிக்கு சென்று விட்டு வருவதாக மைனாவதியுடன் சென்ற தங்கபாலு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரகாசும், தங்கபாலுவின் அண்ணன் சிவா இருவரும் பல்வேறு இடங்களில் அவர்களை தேடினர். அப்போது தங்கபாலுவும், மைனாவதியும் மாதம்மாள் வசித்து வந்த வீட்டின் மேல் பகுதியில் மின்விசிறி மாட்டும் கம்பியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சம்பத், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மைனாவதியின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், தங்கபாலுவின் உடலை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story