மரத்தில் கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி


மரத்தில் கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 4 Oct 2018 3:45 AM IST (Updated: 4 Oct 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

மேல்மலையனூர், 

வேலூர் உத்திரமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் மகன் பிரேம்ராஜ்(வயது 21). அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த உறவினர் ஒருவர் இல்ல பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வது என முடிவு செய்தார். இதையடுத்து பிரேம்ராஜ் தனது நண்பர்களான வேலூரை சேர்ந்த ஜெகன்(31), பிரபாகரன்(21) ஆகியோருடன் ஒரு காரில் செஞ்சிக்கு நேற்று மதியம் வந்தார்.

பின்னர் அவர்கள் 3 பேரும் பிறந்தநாள் விழா முடிந்ததும் இரவு மீண்டும் அதேகாரில் வேலூருக்கு புறப்பட்டனர். காரை வேலூரை சேர்ந்த கஜேந்திரன் மகன் கிரண்(24) என்பவர் ஓட்டினார். நள்ளிரவு 1 மணியளவில் மேல்மலையனூர் அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோவில் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் பிரேம்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெகன், பிரபாகரன், கிரண் ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்த டிரைவர் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே விபத்தில் பலியான பிரேம்ராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story