சிவகங்கை தாலுகாவில் 23 நலவாழ்வு மையங்கள் சீரமைப்பு பணிக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு; அமைச்சர் பாஸ்கரன் தகவல்


சிவகங்கை தாலுகாவில் 23 நலவாழ்வு மையங்கள் சீரமைப்பு பணிக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு; அமைச்சர் பாஸ்கரன் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2018 3:30 AM IST (Updated: 4 Oct 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை தாலுகாவில் 23 நலவாழ்வு மையங்கள் சீரமைப்பு பணிக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த மாங்குடி கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட நலவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதாமணி வரவேற்று பேசினார். அமைச்சர் பாஸ்கரன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். பின்னர் பேசும்போது கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது சுகாதாரத்துறை மீது தனிக்கவனம் செலுத்தி அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கி வருகிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகம் சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்திற்கு பொது சுகாதாரத்துறைக்கு என 4 விருதுகளை மத்திய அரசு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 275 துணை சுகாதார மையம் உள்ளது. இதில் சிவகங்கை தாலுகாவில் மட்டும் 23 மையம் உள்ளது. இந்த 23 மையத்தையும் முதல் கட்டமாக நலவாழ்வு மையமாக அரசு தரம் உயர்த்தியுள்ளது.

மேலும் நலவாழ்வு மையங்களை மேம்படுத்தும் வகையில் சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மையத்தில் தினந்தோறும் 2 செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் இதில் ஒரு செவிலியர் இங்கேயே தங்கியிருந்து பணியில் ஈடுபட்டு வருவார். தரம் உயர்த்தப்பட்ட நலவாழ்வு மையத்தில் 12 வகையான மருத்துவ சேவைகளை பொதுமக்கள் கூடுதலாக பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் தற்போது தொழில்நுட்ப உதவிகளுடன் ஒவ்வொரு செவிலியருக்கும் கையடக்க கணினியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாள் தோறும் சிகிச்சைக்காக வரும் மக்களின் பதிவுகள் ஏற்றம் செய்வதுடன் அவர்களுக்கு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்தும் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் சிகிச்சை பெறும் நபர்களுக்கு மாதாந்திர பரிசோதனைக்கான கையேடு வழங்கியதுடன் செவிலியர்களுக்கு கையடக்க கணினியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர்கள் முத்துராணி, ஆனந்த், ஆதவன், சுகாதார ஆய்வாளர்கள் மோகன், முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story