மின்னணு பரிவர்த்தனை மூலமாக ரூ.87¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்


மின்னணு பரிவர்த்தனை மூலமாக ரூ.87¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:15 AM IST (Updated: 4 Oct 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு பரிவர்த்தனை ஏலம் மூலமாக ரூ.87¼ கோடிக்கு மஞ்சள் விற்பனை நடந்து உள்ளது.

ஈரோடு,

விவசாயிகளின் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு, அவல்பூந்துறை, கொடுமுடி, சிவகிரி, சித்தோடு, பவானி, பூதப்பாடி, அந்தியூர், மைலம்பாடி, கவுந்தப்பாடி, நம்பியூர், கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, தாளவாடி, பெருந்துறை, வெள்ளாங்கோவில், எழுமாத்தூர் ஆகிய 18 இடங்களில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் செயல்படுகின்றன.

இந்த விற்பனைக்கூடங்களில் மஞ்சள், பருத்தி, நிலக்கடலை, புகையிலை, மக்காச்சோளம், நாட்டு சர்க்கரை, நெல், மிளகாய், எள், தேங்காய், கொப்பரை தேங்காய், கம்பு, சோளம், சூரியகாந்தி விதை, ராகி, ஆமணக்கு விதை ஆகிய விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதியில் இருந்து மின்னணு பரிவர்த்தனை மூலமாக ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.

மின்னணு பரிவர்த்தனை ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சளின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு பரிவர்த்தனை மூலமாக 12 ஆயிரத்து 396 டன் மஞ்சள் ரூ.87 கோடியே 34 லட்சத்து 42 ஆயிரத்து 965-க்கு ஏலம் விடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் எஸ்.சின்னசாமி கூறியதாவது:-

மின்னணு பரிவர்த்தனை மூலமாக மஞ்சள் ஏலம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ‘யுஎம்பி’ என்கிற செல்போன் செயலி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் மஞ்சளின் தரம், விலையின் நிலவரம் வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்படும். இந்த மின்னணு ஏலத்தில் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் மஞ்சளுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 301 டன் மஞ்சள் ரூ.2 கோடியே 5 லட்சத்து 39 ஆயிரத்து 557-க்கும், 2017-18 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 36 டன் மஞ்சள் ரூ.57 கோடியே 78 ஆயிரத்து 112-க்கும், நடப்பு ஆண்டில் கடந்த மாதம் வரை 4 ஆயிரத்து 59 டன் மஞ்சள் ரூ.28 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரத்து 296-க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மின்னணு பரிவர்த்தனை ஏலம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 12 ஆயிரத்து 396 டன் மஞ்சள் ரூ.87 கோடியே 34 லட்சத்து 42 ஆயிரத்து 965-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 18 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இந்த ஆண்டு 2 லட்சத்து 4 ஆயிரம் டன் விளைபொருட்களை விற்பனை செய்யவும், அதன் மூலமாக ரூ.14 கோடியே 80 லட்சம் வருவாய் ஈட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 90 ஆயிரத்து 600 டன் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு, ரூ.6 கோடியே 20 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

இதேபோல் அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் ஆகிய ஒழுங்குமுறை கூடங்களிலும் மின்னணு பரிவர்த்தனை ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேவையான சேமிப்பு கிடங்குகள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அதன்படி அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் 2 ஆயிரம் டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கிடங்கும், எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் ஆயிரம் டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கிடங்கும் கட்டப்பட உள்ளது என்று அவர் கூறினார்.


Next Story