தரமற்ற முறையில் பாலம் கட்டுவதாக கூறி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
தரமற்ற முறையில் பாலம் கட்டுவதாக கூறி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் சாலையில் தற்போது ரூ.50 லட்சம் செலவில் சிமெண்டு சாலை மற்றும் ஈசா பெரிய ஏரியின் உபரி நீர் செல்லும் ஓடை கால்வாயின் மேல் ஒரு சிறிய பாலம் அமைக்கும் கட்டுமானப்பணியும் நடைபெற்று வருகின்றன.
மேற்கண்ட பாலத்தை கடந்து தான் அருகே உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள், தபால் தெரு, மேட்டுத்தெரு உள்பட 100–க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் தினமும் சென்று வரவேண்டும்.
இந்த நிலையில், மேற்கண்ட தரைப்பாலத்தின் கட்டுமானப்பணியில் இரும்பு கம்பிகளை பயன்படுத்தாமல் வெறும் சிமெண்டு, மணல் போன்றவற்றை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பாலத்தின் பக்கவாட்டு சுவரை தரமற்ற முறையில் கட்டுவதால் யாருக்கும் பயன்இல்லை என்கிற புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பாலத்தில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக நிறுத்தி விட்டு, இரும்பு கம்பிகளை கொண்டு தரமான முறையில் பாலத்தை கட்டிட வேண்டும். கால்வாயின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து வழங்கப்பட்டு வரும் குடிநீருக்கு பதில் வேறு ஒரு இடத்தில் அழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரமாக அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களுடைய கோரிக்கை மனுவை வாங்குவதற்கு பேரூராட்சி அலுவலகத்தில் உரிய அதிகாரிகள் இல்லை. இந்த நிலையில் அங்கு வந்த வரி தண்டலர் ரங்கநாதனிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.