மராட்டிய பா.ஜனதாவை சேர்ந்த ஆசிஸ் தேஷ்முக் எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா


மராட்டிய பா.ஜனதாவை சேர்ந்த ஆசிஸ் தேஷ்முக் எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 4 Oct 2018 5:02 AM IST (Updated: 4 Oct 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய பா.ஜனதாவை சேர்ந்த ஆசிஸ் தேஷ்முக் எம்.எல்.ஏ. திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவர் காங்கிரசில் சேர திட்டமிட்டுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் விதர்பா பகுதியில் உள்ள கடோல் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆசிஸ் தேஷ்முக். பா.ஜனதாவை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் வார்தா மாவட்டத்திற்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திடீரென சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் அவர் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஆசிஸ் தேஷ்முக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேக் இன் இந்தியா, மேக்னெடிக் மகாராஷ்டிரா போன்ற தொழில் முதலீட்டு திட்டங்களால் எந்த பலனும் கிடைக்கவில்லை. விதர்பா மண்டலத்தை தனிமாநிலமாக பிரிக்கும் பிரச்சினையில் பா.ஜனதா வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த பிரச்சினையில் கடந்த 2013-ம் ஆண்டில் நான் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினேன். அப்போது பா.ஜனதா தலைவர்களான நிதின் கட்காரி, தேவேந்திர பட்னாவிஸ், வினோத் தாவ்டே ஆகியோர் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விதர்பா தனிமாநிலமாக பிரிக்கப்படும் என்று என்னிடம் வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மறந்து விட்டனர்.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்து உள்ளது. இதனை சகிக்க முடியவில்லை. எனவே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.

ராகுல்காந்தியிடம் இருந்து இளைஞர்கள் நிறைய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஆசிஸ் தேஷ்முக்கின் ராஜினாமா உடனடியாக ஏற்கப்படாது என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறினார். அடுத்த ஆண்டு சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் இடைத்தேர்தலை தவிர்க்கும் பொருட்டு ராஜினாமாவை ஏற்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story