“36 இடங்களில் மழை வெள்ள அபாயம்” கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


“36 இடங்களில் மழை வெள்ள அபாயம்” கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2018 3:15 AM IST (Updated: 4 Oct 2018 10:41 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 36 இடங்களில் மழை வெள்ள அபாயம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி, 


இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிக்கக்கூடிய 36 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த ஒவ்வொரு இடத்துக்கும் மண்டல அளவிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் வருவாய்த்துறை, போலீஸ், சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர உள்ளூர் மக்களை ஒருங்கிணைத்து சுமார் 10 பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெண்களும் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் எங்காவது வெள்ள அபாயம் ஏற்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடுவதற்கான அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து துறை அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே விளக்கி கூறப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர் தலைமையில் பொதுப்பணித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவர்களிடம் உள்ள டீசல் ஜெனரேட்டர்கள், டார்ச்லைட் மற்றும் மீட்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

வெள்ளம் பாதிக்கும் பகுதியில் மீட்கப்படுபவர்களை தங்க வைப்பதற்கான மையங்களும் தயார் நிலையில் உள்ளன. கனமழை பெய்தாலும் ஏதேனும் பாதிப்பு வந்தாலும் உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளோம்.

மீனவர்கள் அடுத்த 5 நாட்கள் கடலுக்கு செல்லக்கூடாது. ஆழ்கடலில் யாரேனும் மீன்பிடித்துக் கொண்டு இருந்தால் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து மீனவர்களும் கரைக்கு திரும்பி வருகின்றனர். 20 விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். இதில் 12 படகுகளில் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் விரைவில் கரைக்கு திரும்புவார்கள் என்று தகவல் வந்து உள்ளது. கடலோர காவல்படை தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story