அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில், அடுத்த மாதம் (நவம்பர்) 27-ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகத்தில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின. இதேபோன்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகத்திலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.
ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல், விளாத்திகுளம், கயத்தாறு, எட்டயபுரம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்கள் மற்றும் யூனியன் அலுவலகங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வெறிச்சோடின. பல்வேறு தேவைகளுக்காக தாலுகா அலுவலகங்கள், யூனியன் அலுவலகங்களுக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரும்பாலான அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சகாயராஜ், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சுந்தரராஜ், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஜெகநாதன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் மூர்த்தி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் சேகர், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பாப்றையஸ், அரசு ஊழியர் சங்கம் சீனிவாசன், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சுப்பிரமணியன், சத்துணவு ஊழியர் சங்கம் துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story