கன்டெய்னர் லாரி- மினி வேன் மோதல்: தொழிலாளி உள்பட 2 பேர் பலி
தூத்துக்குடி அருகே கன்டெய்னர் லாரி- மினி வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடி வடக்கு செவல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜபாண்டி (வயது 52), காசி சாமி (60). பனையேறும் தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்கள் அங்குள்ள கோவிலில் நேர்ச்சையாக ஆடுகளை காணிக்கையாக செலுத்த திட்டமிட்டனர். அதன்படி ராஜாபாண்டி, காசி சாமி உள்ளிட்ட 3 பேர் நேற்று காலையில் ஆடுகளை வாங்குவதற்காக தூத்துக்குடிக்கு மினி வேனில் புறப்பட்டு சென்றனர். அந்த மினி வேனை அதே ஊரைச் சேர்ந்த வெட்டும்பெருமாள் மகன் சிவசாமி (25) ஓட்டிச் சென்றார். பின்னர் அவர்கள், தூத்துக்குடியில் ஆடுகளை வாங்காமல், மற்றொரு இடத்தில் ஆடுகளை வாங்கலாம் என்று கருதி திரும்பி வந்தனர்.
தூத்துக்குடி அருகே தருவைக்குளம் பட்டினமருதூர் தனியார் நிறுவனம் அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, எதிரே ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மினி வேனின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினி வேனில் இருந்த ராஜபாண்டி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிவசாமி, காசி சாமி ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தருவைக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
படுகாயம் அடைந்த சிவசாமி, காசி சாமி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவசாமி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த காசி சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மினி வேனில் வந்த மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி டிரைவரான திருவாரூரைச் சேர்ந்த முருகய்யா மகன் கலையரசனை (27) கைது செய்தனர்.
Related Tags :
Next Story