புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ திரும்ப பெற வேண்டும்.
21 மாத ஊதிய நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும், அரசு பள்ளிக்கூடங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். பெரும்பாலானவர்கள் பணிக்கு செல்லவில்லை. நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், யூனியன் அலுவலகம் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டத்தில் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் உள்பட பல்வேறு தாலுகா அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது. பல்வேறு பணிகளுக்காக இந்த அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். பள்ளிகளிலும் கல்விப்பணி பாதிக்கப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையிலுள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் தலைமை தாங்கினார். ஆசீர் சார்லஸ் நீல், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரிராஜா வரவேற்று பேசினார்.
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மணிமேகலை, குமாரவேல், நாகராஜன், மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். சிலர் காதில் பூ சுற்றி இருந்தனர். கற்பகம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் கூறியதாவது:- எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குவோம். அதற்கான ஆயத்த மாநாடு சேலத்தில் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க தலைவர் மைதீன் பட்டாணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க மாவட்ட பொருளாளர் பால்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஓய்வூதியர் சங்க நிர்வாகி பாலுச்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் இளங்கோ, கண்ணன், ராஜ், ரத்தினம், மனோகரன், சங்கரநாராயணன், பசுபதி, வெங்கடாச்சலம், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி பகுதி அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணியாற்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி வைகுண்டசாமி வரவேற்றார். வட்ட கிளை தலைவர் மாரியப்பன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் கங்காதரன், தலைமை ஆசிரியர் முருகையா உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் பிரிவு சார்பில் தாயம்மாள், தேவி, கிருஷ்ண மணி, பொன்மலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story