மின் கம்பத்தில் ஆட்டோ மோதியது: விவசாயி பலி; 4 பேர் காயம்


மின் கம்பத்தில் ஆட்டோ மோதியது: விவசாயி பலி; 4 பேர் காயம்
x
தினத்தந்தி 5 Oct 2018 3:00 AM IST (Updated: 4 Oct 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் மின்கம்பத்தில் ஆட்டோ மோதியதில் விவசாயி பரிதாபமாக பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

தென்காசி,


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மருது பாண்டியன் (வயது 34). விவசாயி. இவர் ஆலங்குளம் அருகே உள்ள மேலபட்டமுடையார்புரத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்காக தனது குடும்பத்தினருடன் சென்று இருந்தார். திருவிழா முடிந்ததும் நேற்று குற்றாலத்தில் குளிப்பதற்காக மருது பாண்டியன், அவருடைய தங்கை சுமதி, உறவினர் முத்துராமன் உள்பட 5 பேர் ஒரு ஆட்டோவில் குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர். அங்கு அனைவரும் மகிழ்ச்சியாக குளித்தனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் அதே ஆட்டோவில் மேலபட்டமுடையார்புரத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.

ஆட்டோ குற்றாலம் பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரோட்டின் ஓரமாக நின்ற மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் மருது பாண்டியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுமதி உள்பட 4 பேரும் லேசான காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமதி உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மருது பாண்டியனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (30) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story