ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அலுவலகங்கள் வெறிச்சோடின.
ராமநாதபுரம்,
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மதிப்பூதிய தொகுப்பூதிய ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற கேரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் தற்செயல்விடுப்பு எடுத்து இருந்ததால் பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கருவூலத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் இந்த தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அந்தந்த அலுவலகங்களில் நடைபெற்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
தற்செயல் விடுப்பு போராட்டத்தையொட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் லியோ ஜெரால்டு எமர்சன் வரவேற்று பேசினார்.
தமிழக அரசு மாநில ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் அடுத்த மாதம் (நவம்பர்) 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் ஆர்ப்பாட்டத்தினர் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் முத்துமுருகன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லாரன்ஸ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் தர்மராஜ், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் திருநீலகண்ட பூபதி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் தங்கமணி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் வே.கனகராஜ், அனைத்து மைய வள ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் திலகராஜன், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளார் சண்முகநாத துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் லிங்கதுரை நன்றி கூறினார்.
Related Tags :
Next Story