ராஜபாளையம் அய்யனார் ஆற்றுப் பகுதிக்கு செல்ல 10-ந்தேதி வரை தடை


ராஜபாளையம் அய்யனார் ஆற்றுப் பகுதிக்கு செல்ல 10-ந்தேதி வரை தடை
x
தினத்தந்தி 5 Oct 2018 3:15 AM IST (Updated: 5 Oct 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க வனத்துறையினர் வருகிற 10-ந்தேதி வரை தடை விதித்துள்ளனர்.

ராஜபாளையம்,


ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவியது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீராவி அருவி, முள்ளிக்கடவு ஆறு, மாவரசியம்மன் கோவில் மற்றும் மலட்டாறு போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நேற்று காலை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மூலம் நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 1-வது நீர்த் தேக்கத்தில் தண்ணீரின் அளவு 9 அடியை நெருங்கி வருகிறது. 2-வது நீர்த் தேக்கத்தில் 4.5 அடியை எட்டி உள்ளது.

மேலும் முடங்கியாற்றில் நீர் நிறைந்து செல்வதால் பிரண்டை குளம், பெரியாதி குளம், புதுக்குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கும் தற்போது தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து மலைத்தொடர்களில் கன மழை பெய்யக்கூடும் என்பதாலும், வானிலை ஆராய்ச்சி மையம் வருகிற 7-ந் தேதி தமிழகத்தில் “ரெட் அலர்ட்“ எச்சரிக்கை விட்டிருப்பதாலும் ராஜபாளையம் அய்யனார் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கோ, மேலும் ஆற்றைக் கடந்து கோவிலுக்கு செல்லவோ இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 10-ந்தேதி வரை வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

Next Story