ஆரணியில் காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை காதலன் மீது வழக்கு


ஆரணியில் காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை காதலன் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Oct 2018 4:30 AM IST (Updated: 5 Oct 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பிச்சாண்டி நகரை சேர்ந்தவர் சரவணன், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுக்கு ஷாலினி (வயது 18), ஷாமிலி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஷாலினி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஆரணி என்.எஸ்.பிரகாஷ் நகரை சேர்ந்தவர் பூபதி, நகை அடகுக்கடை வியாபாரி. இவருடைய மகன் அருண்விஜய் (20). இவரும் ஷாலினியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு அருண்விஜயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஷாலினியும், அருண்விஜயும் சேர்ந்து வாழ முடியவில்லை. எனவே ஒன்றாக இறந்துவிடுவோம் என்று முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 2-ந் தேதி ஷாலினி அருண்விஜய்க்கு போன் செய்தார். அவர் எடுக்கவில்லை. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நினைத்த ஷாலினி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை ஆரணி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆற்காடு அருகே மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாலினி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஷாலினியின் தந்தை சரவணன் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவுக்கு அருண்விஜய் தான் காரணம் என்று கூறி உள்ளார். அதன்பேரில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அருண்விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story