காதலனுடன் இளம்பெண்ணுக்கு திருமணம் மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் நடந்தது


காதலனுடன் இளம்பெண்ணுக்கு திருமணம் மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் நடந்தது
x
தினத்தந்தி 4 Oct 2018 10:45 PM GMT (Updated: 2018-10-05T02:44:43+05:30)

சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில், மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் காதலனுடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ராதாபுரத்தை சேர்ந்தவர் குலாப்ஜான். இவரது மகன் முகமது (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த முகமதுவின் மகள் சாயின் (20) என்பவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் கடந்த 2015-ம் ஆண்டு காதலர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இதையடுத்து முகமது குவைத்திற்கு வேலைக்கு சென்றார்.

2 ஆண்டுகள் அங்கு வேலை செய்துவிட்டு கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு திரும்பினார். இதையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும் பழகி உள்ளனர். அப்போது முகமது ஆசை வார்த்தை கூறி சாயினிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பல்வேறு காரணங்களை முகமது கூறி சாயினை திருமணம் செய்து கொள்ள மறுத்து உள்ளார். இதையடுத்து சாயின், தன்னை முகமது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் முகமதுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக சாயினுக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து சாயின், வக்கீல் ராஜசேகர் மூலம் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு குறித்து நேற்று மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி மற்றும் சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து இருதரப்பையும் சமரசம் செய்து முகமதுவுக்கும், சாயினிற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஜமாத் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் மணமக்களை நீதிபதிகள் வாழ்த்தினர்.

சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் இதுபோன்று திருமணம் செய்து வைப்பது இதுவே முதல்முறை என்று நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்பட்டது.

Next Story