புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டம்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2018 10:45 PM GMT (Updated: 4 Oct 2018 9:52 PM GMT)

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நேற்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாமக்கல்லில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

நாமக்கல்,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத்தொகை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15,760 அரசு ஊழியர்களில் 1,221 பேர் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். எனவே அரசு அலுவலகங்களில் தினசரி நடைபெறும் பணிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

ஆசிரியர்களை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 6,983 பேரில் 5,900 பேர் பணிக்கு வந்து இருந்தனர். 1,051 பேர் மட்டுமே நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து இருந்தனர். 32 பேர் தொடர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய இந்த போராட்டத்தில் மொத்தம் 2,272 பேர் கலந்து கொண்டனர்.

இது குறித்து முதன்மை கல்வி அதிகாரி உஷா கூறியதாவது:-

நாமக்கல் மாவட்ட கல்வித்துறையை பொறுத்தவரையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அந்தந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை கொண்டே எவ்வித சிக்கலும் இன்றி பள்ளிகளை செயல்படுத்தி விட்டோம். நாமக்கல் ஒன்றியத்தில் மட்டும் 30 ஈராசிரியர் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை.

எனவே ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை கொண்டு அப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. எனவே ஜாக்டோ-ஜிடோ கூட்டமைப்பினர் போராட்டத்தால் மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கம் போல் பணிகள் நடந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். மற்றொரு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இதில் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ராமு, செல்வராஜ், உள்பட பல்வேறு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story