முகநூல் காதலை நம்பி ஏமாந்த பெண் டாக்டர் தற்கொலை முயற்சி
முகநூல் காதலை நம்பி ஏமாந்த பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக சேலம் என்ஜினீயரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண் டாக்டருக்கும், சேலத்தை சேர்ந்த ஒரு என்ஜினீயருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் முகநூல் வாயிலாக அடிக்கடி பேசி வந்தனர். நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில் நேரில் சந்திக்க வேண்டும் என்று பெண் டாக்டரிடம் என்ஜினீயர் கூறி உள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம், சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவரை என்ஜினீயர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு அறை எடுத்து 2 பேரும் தங்கினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் சாப்பிடுவதற்காக, ஓட்டலில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு வந்தனர். அப்போது திடீரென்று பெண் டாக்டர் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அவரது காதலரான என்ஜினீயர் ஆகியோர் பெண் டாக்டரிடம் விசாரித்தனர். அப்போது வலி நிவாரண மாத்திரை அதிகம் சாப்பிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று பெண் டாக்டரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இது குறித்து மராட்டிய மாநிலத்தில் உள்ள பெண் டாக்டரின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் செய்ய காதலனான என்ஜினீயர் மறுப்பு தெரிவித்ததால் ஏமாற்றத்தில் தூக்க மாத்திரை தின்று பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story