எங்கு பார்த்தாலும் வெள்ளம்: ஒருநாள் மழைக்கே தாங்காத நகரம்


எங்கு பார்த்தாலும் வெள்ளம்: ஒருநாள் மழைக்கே தாங்காத நகரம்
x
தினத்தந்தி 4 Oct 2018 11:41 PM GMT (Updated: 4 Oct 2018 11:41 PM GMT)

புதுவையில் நேற்று ஒருநாள் பெய்த மழைக்கே நகரப்பகுதி தாக்குப்பிடிக்க முடியவில்லை. முக்கிய வீதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

புதுச்சேரி,

புதுவை நகரப்பகுதியில் ஒயிட் டவுன் பகுதியானது பிரெஞ்சுக்காரர்களால் வடிவமைக்கப்பட்டது. மழை, வெயில், புயல், வெள்ளம் என எதையும் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. நேரான அகன்ற தெருக்கள், தெருவின் இருபுறத்திலும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அந்த அடிப்படையிலேயே நகரப்பகுதியும் வடிவமைக்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு, குப்பைகளை சரிவர கையாளாதது போன்றவை காரணமாக இந்த நகரப்பகுதிக்கு மழைக்காலத்தில் ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.

நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை, நேற்றும் நீடித்தது. காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 69 மி.மீ. மழை புதுவையில் பதிவாகியிருந்தது. நீண்டநேரம் மழை பெய்து இந்த மழை அளவு எட்டப்பட்டது.

ஆனால் நகரப்பகுதியில் மழைநீர் வடியாததால் புஸ்சி வீதி, காந்தி வீதி, செயின்ட் தெரேஸ் வீதி என பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. நேற்று காலையிலும் இதே நிலை நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள்களின் என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதனை தொடர்ந்து இயக்க முடியாமல் தள்ளிச்சென்றனர். அதேபோல் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்களும் தண்ணீரில் சிக்கி தொடர்ந்து இயங்க முடியாமல் தண்ணீரிலேயே நின்றன. அதை மாணவர்கள் தள்ளி சென்றதை காண முடிந்தது.

மழை காரணமாக 100 அடி ரோடு, மிஷன் வீதியில் மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதை தீயணைப்பு மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் விரைந்து வந்து வெட்டி அகற்றினர்.

இதேபோல் கல்வித்துறை அலுவலகம் அருகே சாலையின் நடுவில் இருந்த மின்கம்பம் நடுரோட்டில் சாய்ந்தது. அங்கு உடனடியாக மின்சாரத்தை துண்டித்த மின்துறையினர், சாய்ந்த மின்கம்பத்தை அகற்றினர்.

புதுவை இந்திராகாந்தி சிலை, சிவாஜி சிலை, பாவாணர் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் மழைவெள்ளம் தேங்கியது. நேரு நகர் பகுதியில் சிலரது வீடுகளுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. முக்கிய வீதிகள் பலவற்றிலும் முட்டியளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைவிட்ட பின்னரும் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது.

வடிகால் வாய்க்கால்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாமல், அடைப்புகள் இருந்ததால்தான் தண்ணீர் வடியவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்கள். கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரும் தூய்மை பணிகள் மேற்கொண்டும், நாள்தோறும் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி பணிகளை முடுக்கி விடுகிறோம் என்ற நிலையிலும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்பதையே நேற்றைய மழை நிகழ்வுகள் காட்டியுள்ளன.

நேற்று ஒருநாள் மழைக்கே நகரப்பகுதியில் பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டால் புதுவை நகரம் என்னவாக போகிறதோ? என்ற பீதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Next Story