‘மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுங்கள்’ மத்திய அரசுக்கு குமாரசாமி கடிதம்


‘மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுங்கள்’ மத்திய அரசுக்கு குமாரசாமி கடிதம்
x
தினத்தந்தி 5 Oct 2018 12:02 AM GMT (Updated: 2018-10-05T05:32:28+05:30)

மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-மந்திரி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

தேவேகவுடாவும், நிதின் கட்காரியை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடம் உள்ளது.

இந்த இடத்தின் வழியாக காவிரி ஆறு தமிழகத்திற்கு பாய்ந்தோடி வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அங்கு தேக்கப்படும் நீரை பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்துவது, 400 மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வது தான் இந்த அணை கட்டும் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்த திட்டத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்துள்ளது. மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி வழங்க கோரி முழு தகவல்கள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. அதன் மீது மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்க வில்லை.

ஏற்கனவே முதல்-மந்திரி குமாரசாமி டெல்லி பயணம் செய்தபோது, பிரதமர் மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை நேரில் சந்தித்து, மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகம் சட்டத்தை மதித்து நடக்கும் மாநிலம் என்பது உங்களுக்கு தெரியும். தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களும் ஒரே மாதிரியான கலாசாரம், பண்பாடுகளை கொண்டுள்ளவை ஆகும். இரு மாநில மக்களும் அமைதியை விரும்புகிறார்கள்.

அதனால் இந்த காவிரி பிரச்சினையை தீர்ப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்காது என்று நான் நம்புகிறேன். பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவது, 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது, காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீரை வழங்குவது ஆகியவை தான் புதிய அணையின் நோக்கம் ஆகும்.

கடந்த ஜூன் 1-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 31-ந் தேதி வரை 3 மாதத்தில் தமிழகத்திற்கு 314.49 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி நீர் கடலில் போய் கலந்து வீணாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்கள், நீர் ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு இல்லாமல் காவிரி ஆற்றில் நீர்மின் உற்பத்தி திட்டங்களை அமல் படுத்திக்கொள்ள காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நீர்மின் உற்பத்தி திட்டத்திற்காக காவிரி ஆற்றில் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு எந்த தடையும் இல்லை. இந்த திட்டம் கர்நாடக மாநில எல்லைக்குள் அமல்படுத்தப்படுகிறது. புதிய அணையில் தேக்கப்படும் நீர், விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தமாட்டோம்.

மேலும், தமிழகத்திற்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்ணீர் அளவில் எந்த பாதிப்பும் இருக்காது. மழை நன்றாக பெய்யும் இயல்பான ஆண்டுகளில் தமிழகத்திற்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு, அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி மத்திய நீர்வளத் துறை ஆணையரிடம் மீண்டும் தாக்கல் செய்துள்ளோம்.

இந்த விஷயத்தில் மத்திய நீர்வள ஆணையத்தின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் நாங்கள் பின்பற்றி இருக்கிறோம். இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.5,912 கோடி ஆகும். புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவாக வழங்க ேவண்டும். இந்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தில் இரு மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய நீர்ப்பாசனத்துறை மந்திரி நிதின் கட்காரியை முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று முன்தினம் டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

தேவேகவுடா பேசும்போது, மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதகமும் ஏற்படாது என்றும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறுவதாக அமையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதனால் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த நிதின் கட்காரி, தமிழக அரசுடன் பேசி இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Next Story